கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ. 11 லட்சம் செலவிட்டதாக அனிதா சம்பத் பேசிய காணொளிக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளரும் ,செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் காஞ்சிபுரம் மாவட்டம், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்துக்கு அருகே சென்று காணொளி ஒன்றை எடுத்துள்ளார்.
அதில் பேசிய அவர், அந்த குளத்தின் அருகில் உள்ள படிக்கட்டு அமைக்க ரூ. 11 லட்சம் செலவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த குளத்திற்கு ரூ. 11 லட்சத்தில் படிக்கட்டா? 12 லட்சத்தில் ஒரு வீடே கட்டிவிடுகிறார்களே எனக் கூறி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு மையம், “காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2022-23ம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் அவற்றின் செலவுகளில் விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.