அமரன் படத்தில் தோன்றிய தொலைபேசி எண் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் படக்குழு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த அமரன் படம் கடந்த அக். 31 அன்று வெளியானது.
இப்படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி தன் தொலைபேசி எண்ணை எழுதி சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். திரையில் தோன்றிய அந்த எண் சென்னையைச் சேர்ந்த வாகீசன் என்ற கல்லூரி மாணவரின் எண் என தெரியவந்தது. பலரும் அது சாய் பல்லவியின் எண் என நினைத்து அந்த மாணவருக்கு போன் செய்தது பேசுபொருளாக மாறியது.
இது தொடர்பாக அந்த மாணவர், “இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் நிறைய பேர் அழைக்கிறார்கள். தீபாவளி அன்று இரவு போனை மியூட் செய்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் 100-க்கும் மேற்பட்ட மிஸ்டு கால் இருந்தது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் எந்த பதிலும் வரவில்லை.
இதனால் போனை சைலண்டில் போட்டுவிட்டேன். எனவே, முக்கியாமான கால் எதையும் மிஸ் செய்துவிடுவேனா என்று பயமாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக இதே எண்ணை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே அதனை இழக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இது சம்மந்தமாக குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடம் பேசியும், இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று அந்த மாணவர் தெரிவித்தார்.
மேலும், தொலைபேசி எண் விவகாரத்தில் தனக்கு மனவேதனை ஏற்பட்டதாகவும், தொடர்ந்து வரும் அழைப்புகளால் சொல்லமுடியாத கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் கூறி வாகீசன் என்ற மாணவர் அமரன் படக்குழுவிடம் ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் அந்த காட்சி இன்னும் நீக்கப்படாததால், அமரன் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வாகீசன் அமரன் படக்குழு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.