சினிமா

சாதித்தாரா மகிழ் திருமேனி?: ‘விடாமுயற்சி’ விமர்சனம்

நட்சத்திர பிம்பம் இல்லாமல், அதற்கான மெனக்கெடல்கள் இல்லாமல், யதார்த்தத்துக்கு சற்று நெருக்கமாக இருக்க முயற்சித்த, குறைகளைக் கொண்ட...

சுவாமிநாதன்

சுமார் இரு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையரங்கில் பார்க்கப்போகிறோம் எனப் பெரும் குஷியோடு விடாமுயற்சியைப் பார்க்க திரையரங்கு செல்கிறீர்கள் எனில், அவருடையப் பழைய பாணியிலான படங்களை மறந்துவிட்டுச் செல்வது சாலச் சிறந்தது.

அஜர்பைஜானில் ஒரு நெடுஞ்சாலைப் பயணம். அஜித் - த்ரிஷா பயணிக்கிறார்கள். வழியில் சிக்கல். த்ரிஷா கடத்தப்படுகிறார். கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அவரை அஜித் காப்பாற்றினாரா? என்பதுதான் விடாமுயற்சியின் ஒரு வரிக் கதை.

தொடக்கத்தில் விவாகரத்து சூழலையும், காதல் தருணத்தையும் ஒன்றிணைத்து காட்சிகளாகத் தொகுத்திருந்த விதம் நன்றாக இருந்தது. நெடுஞ்சாலைப் பயணம் தொடங்கியபோது, படம் கதைக்குள் நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகமாகிறார்கள். இந்தக் கதைக்கு எந்தளவுக்குக் கதாபாத்திரங்கள் தேவையோ, அதே அளவுக்குக் குறைந்த எண்ணிக்கையில் கதாபாத்திரங்களை வைத்திருந்தார்கள்.

அர்ஜுன், ரெஜினா கதாபாத்திரம் யார் என்பது நமக்குத் தெரியும் வரை தான் இயல்பான சுவாரஸ்யம் இருக்கும். படத்தின் முதல் பகுதி இப்படியாக நகர்ந்தது. இரு வருடங்களுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்க நினைத்தால், வழக்கமான அஜித் படங்களை மறந்துவிட்டு வர வேண்டும். முதல் பகுதி முழுக்க மிக யதார்த்தமான பாணியையே கையாண்டிருந்தார்கள்.

அஜித்துக்கு நாயக பிம்பத்தைக் கொடுக்காமல், மனைவியைத் தொலைத்த சாதாரண கணவர் எப்படி செயல்படுவாரோ அப்படியாகவே அவருக்கான காட்சிகளை எழுதியிருந்தார்கள். படம் மெதுவாகச் செல்லும் உணர்வைத் தந்தாலும், கதைக்குத் தேவையானதை மட்டும் துணிச்சலாகக் காண்பித்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

இரண்டாம் பகுதி தொடக்கத்திலேயே கடத்தியவர்கள் யார்? கடத்தியவர்களின் பின்னணி என்ன? என்பதெல்லாம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. இனி, த்ரிஷாவை எப்படி அஜித் காப்பாற்றுகிறார் என்பதைப் பொறுத்துதான் படத்தின் சுவாரஸ்யம் அமையும். அஜித் ஒரு பெரும் எழுச்சியைப் பெற்று, மிரட்டலான சண்டைக்காரராக ஜொலித்து மனைவியைக் காப்பாற்றுவது போல படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருந்தன. படக் குழுவினர் முற்றிலுமாக இதைத் தவிர்த்திருப்பதாகவே தெரிந்தது.

அதே வேளையில் சில இடங்களில் அஜித் காட்சிகளுக்கு மாஸ் உணர்வைக் கடத்த முயற்சித்திருக்கிறார்கள். அது எடுபடாமல் போனது படத்தின் துரதிருஷ்டம். காரணம், கதாநாயகன் ஒரு தேடலில் இருக்கும்போது அவன் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் கடினமானதாக இருக்க வேண்டும். அவருக்கான விஷயம் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடக் கூடாது. ஆனால், த்ரிஷாவைக் கண்டறிவதற்கான தேடலின்போது, அவர் எளிதாகக் கண்டறியும் வகையிலேயே திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே போனால் இது கிடைத்துவிடும், அங்கே சென்றால் அது கிடைத்தவிடும் என்பதாக எளிமையாக இருந்தால், அதில் சுவாரஸ்யம் துளியும் தங்காது.

ஒவ்வொரு காட்சியையும் அதை எழுதுவதற்கு முன்பு, பல கேள்வி பதில்களை எழுப்பி, அதன் ஊடாகப் பல குறைகளை நீக்கி எழுதுவது இயல்பு. இதைச் செய்யாமல் எழுதினால் அந்தக் காட்சி எப்படி அமையுமோ அப்படியாக அமைந்துவிட்டது.

இதற்கான மிகச் சிறந்த உதாரணம், படத்தின் கிளைமாக்ஸ். வில்லன் கதாபாத்திரங்கள் இருக்கும் இடம் அஜித்துக்குத் தெரிந்துவிடுகிறது. அந்த இடத்துக்குச் செல்ல முடியுமே தவிர, சென்றுவிட்டு உயிருடன் திரும்ப முடியாது என்றெல்லாம் அஜித்துக்குச் சொல்லப்படுகிறது. அதையும் மீறி அங்கே செல்லத் துணிந்து செல்கிறார் அஜித். மிகப் பயங்கரமான இடம் எனில், அஜித்தால் அந்த இடத்துக்குள் எளிதாக நுழைந்துவிட முடியாத அளவுக்கு இருந்திருக்க வேண்டும். விடாமுயற்சியில் அஜித் மிகச் சாதாரணமாக உள்ளே நுழைந்துவிடுகிறார்.

வில்லன் கதாபாத்திரங்களின் பின்னணிக் கதையிலும் பெரிய ஆழம் இல்லை. ஆழமான விவரிப்பு இல்லாததால், அவர்கள் ஏன் பெருங்குற்றம் புரிபவர்களாக உள்ளார்கள், எதற்காக இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது அந்நியமாகவே உள்ளது.

கதை நிகழும் இடமாக அஜர்பைஜானைத் தேர்வு செய்தது நல்ல தேர்வாக அமைந்தது. நாமும் அஜர்பைஜானுக்குச் சென்று ஒரு பெரும் கார் பயணத்தைக் மேற்கொள்ளலாமே என்ற உணர்வைக் கிளப்பும் வகையில், ஒளிப்பதிவில் அஜர்பைஜான் அழகாக இருந்தது. பின்னணி இசையைப் பொறுத்தவரை, டீசரில் ஹிட் அடித்த அந்த ஒரெயொரு இசையை மட்டுமே பயன்படுத்தி அனிருத் தப்பித்துவிட்டார்.

த்ரிஷா மற்றும் அர்ஜுனுக்கு வயது கூடவே கூடாதா என்று எழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. த்ரிஷா இந்த வயதிலும் படம் முழுக்க இளம் நடிகைகளுக்கு நிகராக ஜொலிக்கிறார். அர்ஜுன் இந்த வயதிலும் பழைய அர்ஜுனாகவே சண்டையில் கலக்குகிறார்.

40 வயதுக்கு மேற்பட்ட கணவன், மனைவி வாழ்க்கையில் நிகழும் யதார்த்தமான சூழலில் அஜித்தைப் பொருத்தியிருப்பது புதுமையாக இருந்தது. வழக்கமான அஜித்தாக சண்டைக்கு முக்கியத்துவம் இல்லாமல் உணர்வுகளுக்கு இடம் கொடுத்தது நன்றாக இருந்தது.

சமீப காலங்களில் திரையரங்குகளில் ரசிகர்களின் கால் தரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பழைய படங்களின் காட்சிகளை நினைவூட்டுவது, மெதுவாக நடக்கவிட்டு பின்னணி இசையில் மாஸ் உணர்வை எழுப்புவது என்பது வழக்கமாக உள்ளது. அதைத் தவிர்த்து ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்தது பாராட்டுக்குரியது. இருந்தாலும், இரண்டாவது பாதியில் எழுத்துக்குக் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், நல்ல சுவாரஸ்யமான படமாக வந்திருக்கும்.

நட்சத்திர பிம்பம் இல்லாமல், அதற்கான மெனக்கெடல்கள் இல்லாமல், யதார்த்தத்துக்கு சற்று நெருக்கமாக இருக்க முயற்சித்த, குறைகளைக் கொண்ட கமர்ஷியல் படத்தை பெரும் நிசப்தத்துடன் திரையரங்கில் பார்க்க விரும்பினால், விடாமுயற்சி நிச்சயம் அதற்கான சரியானத் தேர்வாக அமையும்.