அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. நீண்ட நாள்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளார்கள்.
படம் பற்றிய அப்டேட்களை கேட்டு வழக்கம்போல் விடாமுயற்சியை சமூக ஊடகங்களில் பிரபலமடையச் செய்தார்கள்.
ஒரு வழியாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டீசர் நவம்பர் 28 அன்று வெளியானது. டீசரில் படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் 20 அன்று ரம்யா படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானது. டிசம்பர் 22 அன்று அஜித்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி சிறப்புக் குறிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து, டிசம்பர் 27 அன்று அனிருத் இசையில் முதல் பாடல் வெளியானது.
இருந்தபோதிலும், நாள் நெருங்க நெருங்க பட வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக் குழு வெளியிடாமலே இருந்தது. ஒருபுறம் ரசிகர்கள் டிரெய்லருக்கு காத்திருந்தால், வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பின் தாமதம் ரசிகர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால், பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சியின் டிரெய்லர் அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தால், இப்படியொரு சோகம் நிறைந்த அதிர்ச்சிகரமான செய்தி ரசிகர்களை வந்தடைந்திருப்பது அவர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது.
இதுகுறித்து உலவும் தகவல்களின்படி, பிரேக்டவுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி. ஆனால், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைப் பெறுவதில் தான் விடாமுயற்சி படக்குழுவுக்குத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதுபற்றி அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியானல் மட்டுமே ஒத்திவைப்புக்கான உண்மைக் காரணம் குறித்து தெரியவரும்.