ANI
சினிமா

ஏ.ஆர். ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை!

இந்த கடினமான நேரத்தில் அசைக்க முடியாத ஆதரவை அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறார் சாய்ரா ரஹ்மான்.

ராம் அப்பண்ணசாமி

அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது பிரிவு குறித்து கடந்தாண்டு நவம்பர் 19 அன்று அறிவித்தனர். சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா இது குறித்து அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில், சாய்ரா பானுவின் உடல் நிலை குறித்து அவரது வழக்கறிஞர் சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது,

`எங்களின் கட்சிக்காரர் சாய்ரா ரஹ்மான் சார்பில், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து வந்தனா ஷா அசோசியேட்ஸ் வெளியிடும் அறிக்கை,

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்ரா ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த சவாலான நேரத்தில், விரைவாக குணமடைவதில் மட்டுமே அவரது முழு கவனமும் உள்ளது. தனது சுற்றத்தாரின் அக்கறை மற்றும் ஆதரவை அவர் மிகவும் பாராட்டுகிறார். மேலும், அவரது நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கான நல்வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் அசைக்க முடியாத ஆதரவை அளித்த, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தன் நண்பர்கள், ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா, அத்துடன் வந்தனா ஷா மற்றும் ஆ.ஏர். ரஹ்மானுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறார் சாய்ரா ரஹ்மான். அவர்களின் கருணை மற்றும் ஊக்கத்திற்கு அவர் கடமைப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் தன் தனிமைக்கு மதிப்பளிக்குமாறும், இதைப் புரிந்துகொண்டதற்காக நலம் விரும்பிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.