படம்: https://www.instagram.com/actorsrikanth
சினிமா

நடிகர் ஸ்ரீகாந்த் பிணை கோரி மனு?

ஸ்ரீகாந்த் ரூ. 12 ஆயிரத்துக்கு போதைப்பொருள்களை வாங்கியதாகவும்...

கிழக்கு நியூஸ்

போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் பிணை கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் நடைபெற்ற சண்டை தொடர்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் உள்பட 9 பேரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் குறித்த தகவல்கள் வெளியானதாகத் தெரிகிறது. விசாரணையின் தொடர்ச்சியாக போதைப்பொருளை விநியோகித்ததாக பிரதீப் குமார் மற்றும் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடமிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பிரதீப் என்பவர் பிரசாத்துக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. பிரசாத்திடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளை வாங்கியதாக விசாரணை மூலம் தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஸ்ரீகாந்த் ரூ. 12 ஆயிரத்துக்கு போதைப்பொருள்களை வாங்கியதாகவும் நீதிமன்றத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தி தவறிழைத்துவிட்டேன் என அவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே ஸ்ரீகாந்த் பிணை கோரியதாகவும் அப்போது நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் பிணை கோரி புதிதாக மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.