சினிமா

நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்

உயிருடன் இருந்தபோதே தனது கல்லறையை அவர் கட்டிவைத்திருந்தார்.

கிழக்கு நியூஸ்

நடிகர் ராஜேஷ் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து திரைத் துறையில் அறிமுகமானார் ராஜேஷ். கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாள்கள், அச்சமில்லை அச்சமில்லை, இருவர் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் உள்பட மற்ற மொழிகளிலும் ராஜேஷ் நடித்துள்ளார்.

இவர் நேற்று காலமானார். ராஜேஷின் உடல் ராமாபுரத்திலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இவருடைய உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ராஜேஷின் உடல் ராமாபுரம் இல்லத்திலிருந்து இன்று மாலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. சென்னை அசோக் நகர் திருச்சபையில் ஆராதனை செய்த பிறகு கீழ்ப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டது. கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காரல் மார்க்ஸ் கல்லறையில் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்தபோதே தனது கல்லறையை அவர் கட்டிவைத்திருந்தார். தனது அடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் முன்பே குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார். இதன்படி ராஜேஷின் அம்மா, அப்பா மற்றும் மனைவி அடக்கம் செய்யப்பட்ட அதே கல்லறையில் ராஜேஷின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராஜேஷுக்கு தீபக் மற்றும் திவ்யா என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.