என் மீதான சர்ச்சைகளை ஆரம்பித்தவர்களே முடித்து விடுங்கள்: காணொளி வெளியிட்ட பார்த்திபன் 
சினிமா

என் மீதான சர்ச்சைகளை ஆரம்பித்தவர்களே முடித்து விடுங்கள்: காணொளி வெளியிட்ட பார்த்திபன் | Parthiban |

என் பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பையும் தெரிவித்து...

கிழக்கு நியூஸ்

தெலுங்கு பட நிகழ்ச்சியில் சாதியைக் குறிப்பிட்டுப் பேசிய காணொளி சர்ச்சை ஆன நிலையில் விளக்கமளித்து நடிகர் பார்த்திபன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளியாகவுள்ள படம், ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 19 அன்று வெளியாகவுள்ளது.

தெலுங்கில் பேசிய பார்த்திபன்

இதற்கிடையில் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன், தனது சாதியை வெளிப்படையாக கூறி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பார்த்திபன், “என் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். படத்தின் வெற்றி விழாவில் உங்களைச் சந்திக்கும்போது சரளமாக தெலுங்கில் பேசுவேன்” என்று கூறியிருந்தார்.

சாதியைக் குறிப்பிட்டதால் சர்ச்சை

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில், பார்த்திபன் சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:-

பார்த்திபனின் விளக்கம்

“நண்பர்களே வணக்கம். இது விடியலாம். மணி 1. எங்கும் இருள் மூட்டம். விடியக் கூட பொறுமையின்றி இவ்விளக்கக் கடிதம் என்றாவது இது விடிவுக்கு வரட்டும் என்று வரட்டு ஈகோவில் காத்திராமல், அறிந்ததை சொல்கிறேன். அதையும் மீறி என் பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பையும் தெரிவித்து இப்பிரச்னையை விட்டுவிட்டு இப்பொழுதை நற்பொழுதாக்கி கொள்ள வேண்டி கொள்கிறேன்.

பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியுமா?

ஏனோ தெரியவில்லை எந்த லாபமும் இல்லாமல் சில விஷயங்கள் விவாத பொருளாகி பொது நிம்மதிக்கு பங்கம் விளைவித்து விடுகின்றன. நான் எவ்வளவுதான் தமிழ் மீது பற்றோடு இருந்தாலும் என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாதுதானே. எப்படி மாற்ற முடியும்? ஏன் மாற்ற வேண்டும்? என் பிறப்பு என் பொறுப்பு அல்ல. விருப்பமணு போட்டு இப்பெற்றோருக்கு இப்பெயரில் இவ்வீட்டில் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று எந்த குழந்தையும் கேட்டு பெறுவதில்லை. வளரும் சூழ்நிலையில் தானாக தன் வாழ்க்கை அது தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அப்படி நான் வாழ்க்கைப் பட்டிருப்பது தமிழுக்கு. சோறு, சுகம் யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும் எங்கும் ஏன் உலகெங்கும் பெருமையாய் உறக்கச் சொல்வேன்.

நிகழ்ச்சியில் பேசியது என்ன?

என் தாய்மொழி தெலுங்குதான் என்பதை, அங்கு மட்டுமல்ல இங்கும் இன்று மட்டுமல்ல நேற்றும் முன் தினமும் சொல்லியிருக்கிறேன். உஸ்தாத் பகத் சிங் நிகழ்ச்சி மேடையில் மிகுந்த டென்ஷன் நெர்வஸ்னஸ் அதுக்கு சரியான தமிழ் பதம் பதட்டம். காரணம் தெலுங்கில் எனக்கு சரியாக பேச வராது. எப்படியாவது நான் திணறுவது நேரலையில் தெரியாமல் நான்கு வார்த்தையாவது பேசிவிட்டு வந்துவிட வேண்டும் என்பதே கவனத்தில் இருந்ததால் வார்த்தைகளை கவனமாய் களமிறக்க முடியாமல் வேர்க்க வேர்க்கப் பேசிவிட்டு இறங்கினேன்.

ஆரம்பித்தவர்களே முடித்து விடுங்கள்

உஸ்தாத் படத்திற்குக் குரல் கொடுத்தபோது எனக்கு தெலுங்கு பேச வராததால் நிராகரிக்கப்பட்டேன். என் பாத்திரத்திற்கு வேறு குரல். அப்படம் தமிழாக்கப்படும்போது என் கதாபாத்திரத்திற்கு நானே பேசுவேன். வருத்தத்தை உயர்த்த வேண்டாம் என நல்லெண்ணத்தில் எழுத ஆரம்பித்துவிட்டேன். எப்படி முடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனவே இதை ஆரம்பித்தவர்களே அன்போடு முடித்து விடுங்கள். தமிழ் உயர்ந்ததும் உன்னதமானது மட்டுமல்ல அன்பும் கருணையும் நிறைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Actor Parthiban has released a video explaining the controversy surrounding a video in which he made a caste-related remark at a Telugu film event.