நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். அவருக்கு வயது 89. வயது மூப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (சனிக்கிழமை) காலமானார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார், மோகினி மணியின் இறுதிச்சடங்கு, குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“எங்களது தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 89. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மருத்துவப் பராமரிப்பும் ஆதரவும் வழங்கிய மருத்துவ வல்லுநர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்திலும், அவர் ஒரு நீண்ட ஆயுளை வாழ்ந்தார் என்பதும், அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராகத் திகழ்ந்தார் என்பதுமே எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இந்தியப் பிரிவினையின் போது, சிறுமியாக இருந்தபோது அனைத்தையும் இழந்து, புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து, தங்களது வாழ்வை அடிப்படையிலிருந்து தொடங்கிய சிந்தி மக்களில் ஒருவராக இருந்த அவர், தனது பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்ததைக் கண்டு அளவற்ற திருப்தியும் பெருமிதமும் அடைந்தார்.
எங்கள் வாழ்க்கையில் சாதித்த அனைத்திற்கும் அவரே மிக முக்கியக் காரணம். மறைந்த எங்கள் தந்தையுடன் 60 ஆண்டுகள் நீடித்த வெற்றிகரமான திருமண வாழ்க்கையைப் பெறும் பாக்கியத்தை அவர் பெற்றிருந்தார். இந்நேரத்தில் எங்களுக்கு வரும் இரங்கல் செய்திகளால் நாங்கள் நெகிழ்கிறோம்.
எங்கள் தாயாரின் இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Actor Ajith Kumar’s mother, Mohini Mani (89), passed away. Her last rites will be a private family affair, and the family requests privacy.