படம்: https://x.com/AKPPL_Official
சினிமா

ஆமிர் கானின் சிதாரே ஸமீன் பர் யூடியூபில் வெளியீடு! | Sitaare Zameen Par

ஆகஸ்ட் 1-ல் ஆமிர் கான் டாக்கிஸ் யூடியூப் சேனலில் வெளியாகும் இப்படத்தை ஒருமுறை காண ரூ. 100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கிழக்கு நியூஸ்

தமிழ் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் வெளியான சிதாரே ஸமீன் பர் படம் யூடியூபில் வெளியாகும் என நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளார்.

ஆமிர் கான் தயாரித்து நடித்து அமோல் குப்தாவுடன் இணைந்து இயக்கிய படம் தாரே ஸமீன் பர். கடந்த 2007-ல் வெளியான இப்படத்தின் அடுத்த பாகம் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

ஆமிர் கான் நடித்து தயாரித்த சிதாரே ஸமீன் பர் படத்தை தமிழ் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். இப்படம் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் 3 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 57.30 கோடி வசூலித்தது சிதாரே ஸமீன் பர். ஒட்டுமொத்தமாக நிகர வசூலாக ரூ. 167 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகாமல் யூடியூபில் மட்டுமே வெளியாகும் என ஆமிர் கான் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1-ல் ஆமிர் கான் டாக்கிஸ் யூடியூப் சேனலில் வெளியாகும் இப்படத்தை ஒருமுறை காண ரூ. 100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஆமிர் கான் கூறுகையில், "இந்தியாவில் 2-3 சதவீதத்தினர் மட்டுமே திரையரங்குகளில் படங்களைப் பார்க்கிறார்கள். யுபிஐ அறிமுகம் மற்றும் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை இந்திய மக்களுக்கு வசதியானதாக மாறிய பிறகு, டிஜிட்டல் தளத்தில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். எல்லோரும் பயன்படுத்தும் தளமாக இருப்பது யூடியூப். ஒருநாளைக்கு ஏறத்தாழ 55 கோடி இந்தியர்கள் யூடியூபை பயன்படுத்துகிறார்கள். யூடியூப் மூலம் என் படங்களை எல்லா இடங்களிலும் திரையிட முடியும். யுபிஐ இருப்பதனால், எல்லா இந்தியர்களாலும் எளிதாகக் கட்டணம் செலுத்த முடியும்.

சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே ஒரேயொரு முறை தான் நடைமுறையில் இருக்கிறது. திரையரங்குக்கு ஒருமுறை செல்வோம். ஒருமுறை படம் பார்க்க ஒருமுறை பணம் செலுத்துவோம். இதே முறையை நான் டிஜிட்டலிலும் கொண்டவர முடிவு செய்துள்ளேன்" என்றார் ஆமிர் கான்.

ஆமிர் கான் தயாரித்துள்ள மற்ற படங்கள் சிலவும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

Sitaare Zameen Par | Aamir Khan | RS Prasanna | YouTube |