வணிகம்

பணவீக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர்

திறன் அதிகரிக்கும்போது, உற்பத்தி பெறுகும், தொழிலாளர்களின் ஊதியமும் உயரும்.

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன, ஆனால் பணவீக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி.

அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதி ஆயோக் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான அரவிந்த் விர்மானி கூறியதாவது,

`கடந்த 7 ஆண்டுகளுக்கான தொழிலாளர்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் தொழிலாளர்களின் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ப உயரவில்லை. என்னுடைய ஆய்வின்படி பணவீக்கத்திற்கு ஈடுகொடுத்து ஊதியம் உயராததற்குக் காரணம் போதிய திறன் இல்லாமை.

திறன்கள் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை நாம் உருவாக்குவதில்லை. பல நாடுகளின் தரவுகளை நான் பார்த்திருக்கிறேன். அதன்படி திறன் மேம்பாடு தொடர்பாக நாம் பணியாற்றவேண்டும். மிகவும் பலவீனமான நிலையில் அது உள்ளது.

மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே வழியில் மாநில அரசுகளும் பணியாற்றவேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் ஏனென்றால் அங்குதான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் திறன் அதிகரிக்கும்போது, உற்பத்தி பெறுகும், தொழிலாளர்களின் ஊதியமும் உயரும். இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் இவ்வாறுதான் நடைபெறும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், புதிதாக வருபவர்களுக்கும் திறன் மேம்பாடு என்பது தேவை.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கல்வியின் ஒவ்வொரு படிநிலையிலும் திறன் மேம்பாடு தேவைப்படுகிறது. பள்ளிப்படிப்பில் இருந்து பாதியிலேயே பல குழந்தைகள் வெளியேறுகின்றன, அவர்களுக்கு தேவைப்படும் திறனை வழங்கவேண்டும். ஆரம்பநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை என அனைத்துப் படிநிலைகளிலும் திறன் மேம்பாடு அவசியம். அனைத்துவித பணிகளுக்கும் திறன் அவசியம்’ என்றார்.