| Nvidia | $4 Trillion Market Cap
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடாக ஒரு நிறுவனம் சந்தை மதிப்பைக் கொண்டிருந்தால் ஆச்சர்யப்படாமல் எப்படி இருக்க முடியும்?
உலகிலேயே 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைத் தொட்ட முதல் நிறுவனம் என்ற சாதனையை என்விடியா (Nvidia) எனும் நிறுவனம் எட்டியிருக்கிறது. 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பு என்றால் இந்திய மதிப்பில் 343 லட்சம் கோடி ரூபாய். அடேங்கப்பா!
உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 4.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சியுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் முதல் மூன்று இடங்களை அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
பிரேசில், டென்மார்க், சிங்கப்பூர், இஸ்ரேல், மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கூட்டினால் கூட என்விடியா நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொட முடியாது.
இப்படி ஒரு அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கிற இந்நிறுவனம் எதைத் தயாரிக்கிறது, எப்போது தொடங்கப்பட்டது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இதைத்தான் இப்போது காணப்போகிறோம்.
நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?
என்விடியா நிறுவனம், ஜென்சன் ஹுவாங் என்பவரால் 1993-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. வீடியோ கேம்களுக்கு உதவும் கிராஃபிக் சிப்களை தயாரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் என்விடியா. பின்னாளில் செயற்கை நுண்ணறிவான ஏஐ-யின் வளர்ச்சி இந்நிறுவனத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்லத் தொடங்கியது.
ஏஐ-யால் நிகழ்ந்த மாற்றம்
மெஷின் லேர்னிங்குக்கு கிராஃபிக் பிராசெசிங் யூனிட் அவசியம், இதுதான் எதிர்காலம் என்பதை உணர்ந்து இதில் கவனம் செலுத்தியது என்விடியா. ஏஐ உருவாக்கத்தில் என்விடியா நிறுவனம் தான் சிப்களை தயாரிக்கும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது.
என்விடியா நிறுவனத்தின் சிப்கள் தான் மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்களின் டேடா சென்டர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஏஐ போட்டியில் வெற்றி காணத் துடிக்கும் இந்நிறுவனங்கள் தான் என்விடியாவின் வாடிக்கையாளர்கள். சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ உடனும் என்விடியா கைக்கோர்த்துள்ளது.
ஏஐ வளர்ச்சியடையும்போது ஏஐ நிறுவனங்கள் வளர்ச்சி காண்பது இயற்கை. ஏஐ நிறுவனங்கள் வளர்ச்சி காணும்போது, இந்நிறுவனங்கள் அடையும் வளர்ச்சியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை அடைவது இந்நிறுவனங்களுக்குத் தேவையான சாதனங்களை வழங்கும் நிறுவனங்கள். இதுதான் என்விடியா நிறுவனத்தின் வெற்றிச் சூத்திரம்.
என்விடியாவின் வளர்ச்சி!
இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 40 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2015-ல் என்விடியாவின் சந்தை மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர். 2020-ல் 323 பில்லியன் அமெரிக்க டாலர்.
2023-ல் முதன்முறையாக 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் எனும் சந்தை மதிப்பைத் தொட்டது என்விடியா. இது, கடந்தாண்டு பிப்ரவரியில் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. கடந்த மாதம் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் எனும் சந்தை மதிப்பைத் தொட்டது. இப்போது அசுர வேகத்தில் முன்னேறி ஒரே மாதத்தில் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் எனும் சந்தை மதிப்பைத் தொட்டு சாதனை படைத்துள்ளது என்விடியா. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுள்ளதை உலகமே வியந்து பார்க்கிறது.
டீப்சீக்கால் பின்னடைவு
இடையில், சீனாவிலிருந்து வந்த டீப்சீக் ஏஐ, என்விடியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. மிகச் சிறிய பொருட்செலவில் டீப்சீக் ஏஐ தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால், அதிக பொருட்செலவைக் கேட்கும் என்விடியாவின் சிப்களின் நிலை கேள்விக்குறியாகின.
மேலும், ஏஐ போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போட்டி உருவானது. இந்தப் போட்டியில் சீனாவுக்குத் தடங்கலை உண்டாக்க, என்விடியா தனது சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. டீப்சீக் வருகை மற்றும் அமெரிக்கத் தடையால் ஏப்ரலில் நிறைவடைந்த காலாண்டில் என்விடியா நிறுவனம் தனது கூடுதல் வருவாயில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தது. இந்தக் காலாண்டில் 37 சதவீதம் பங்குகளை இழந்தது. இருந்தாலும், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது என்விடியா. ஏப்ரலுக்குப் பிறகு 74% பங்குகள் அதிகரித்தன.
3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைத் தொட்ட முதல் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 3.17 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகச் சந்தை மதிப்பைக் கொண்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மைக்ரோசாஃப்ட். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.73 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலருடன் இந்த ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் உள்ளது என்விடியா.
ஏஐ-ஐ பொறுத்தவரை அடுத்தச் சில காலங்களுக்கு வளர்ச்சி மட்டுமே கண்முன் இருப்பதால், என்விடியா மேலும் வளர்ச்சியை மட்டுமே அடையும் என்பதில் சந்தேகமே இல்லை. லூப் கேபிடல் எனும் முதலீட்டு நிறுவனம், என்விடியா 2028-ல் 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் எனும் அளவுக்கு வளர்ச்சியைத் தொடும் எனக் கணித்துள்ளது. பார்க்கலாம்!