வோடஃபோன் ஐடியா நிறுவனம் பாக்கி வைத்துள்ள ரூ. 36,950 கோடிக்கு பதிலாக, அந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் மத்திய அரசு வசம் செல்லவுள்ளன.
இந்தியாவின் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா நிறுவனம் 2012, 2014, 2015 மற்றும் 2016-ல் நடைபெற்ற அலைக்கற்றை ஏலங்களில் கலந்துகொண்டு ஒட்டுமொத்தமாக ரூ. 36,950 கோடியை மத்திய அரசுக்குப் பாக்கி வைத்துள்ளது.
இதை செலுத்துவதற்கான கெடு முடிவுக்கு வரும் நிலையில், அது தொடர்பாக வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்ஷயா மூந்த்ரா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில், கடந்த மார்ச் 29-ல் மத்திய அரசு பதில் கடிதம் எழுதியது.
2013 கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 62(4)-ன் கீழ், பங்கு ஒன்றை ரூ. 10 மதிப்பீட்டில் நிர்ணயித்து, 3,695 கோடி பங்குகளை மத்திய அரசின் பெயரில் வெளியிடுமாறு வோடஃபோன் ஐடியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செபி உள்ளிட்ட அமைப்புகளிடம் இது தொடர்புடைய உரிய அனுமதியைப் பெற்ற பிறகு 30 நாட்களுக்குள் பங்குகளை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் தற்போது மத்திய அரசு வசம் 22.60 சதவீத பங்குகள் உள்ளன. 3,695 கோடி பங்குகளை புதிதாக வெளியிட்ட பிறகு, மத்திய அரசு வசம் உள்ள பங்குகள் 48.99 சதவீதமாக உயரும்.
அதேநேரம், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக உள்ள இங்கிலாந்தின் வோடஃபோன் குழுமம் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் ஆகியவை நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.