அதானி என்டர்பிரைசெஸ் லிமிடெட் தொடர்புடைய கருத்தாக்கங்களை வெளியிட்டுள்ள டிஜிட்டல் செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதானியின் என்டர்பிரைசெஸ் லிமிடெட் சார்பில் தில்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் செப்டம்பர் 6 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் மீது அவதூறுகளைப் பரப்பும் கட்டுரைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை நீக்குமாறு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களான பரன்ஜாய் குஹா, ரவி நாயர், அபிர் தாஸ்குப்தா, அயாஸ்காந்த் தாஸ் மற்றும் ஆயுஷ் ஜோஷி உள்ளிட்டோருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் யார் தரப்பு வாதங்களையும் கேட்காமல் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் செவ்வாயன்று தனிப்பட்ட ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், யூடியூபர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடம் 138 யூடியூப் வீடியோக்களின் இணைப்பு மற்றும் 83 இன்ஸ்டகிராம் இணைப்புகள் பகிரப்பட்டுள்ளன. இவற்றை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூஸ்லாண்டரி, தி வயர், ஹெச்டபிள்யு நியூஸ் நெட்வொர்க், தேஷ்பக்த் போன்ற நிறுவனங்கள் மற்றும் ரவீஷ் குமார், துருவ் ராதீ போன்ற தனிநபர் ஊடகவியலாளர் மற்றும் யூடியூபர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து 36 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸானது மெடா மற்றும் கூகுளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மத்திய அரசின் நோட்டீஸை பெற்றவர்கள் யாரும் இந்த வழக்கில் மனுதாரர்கள் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு பின்னணி
அதானி என்டர்பிரைசெஸ் லிமிடெட் சார்பில் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் தங்களுடைய நிறுவனத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் வகையில் நிறுவனத்துக்கு சேதத்தை உண்டாக்கியதாக அதானி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த சிவில் நீதிபதி அனுஜ் குமார் சிங், இந்த வழக்கை விசாரித்து செப்டம்பர் 6-ல் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார். எதிர் தரப்பு வாதங்கள் எதையும் கேட்காமல் இந்த இடைக்கால உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட விசாரணை வரை மனுதாரர் (அதானி என்டர்பிரைசெஸ்) புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் விதமான ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத, அவதூறுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கானது முதலில் மாவட்ட நீதிபதி சுனில் சௌதரியின் விசாரணைக்கு தான் பட்டியலிடப்பட்டது. அவர் விடுப்பில் இருந்ததால், சிவில் நீதிமன்றம் அனுஜ் குமார் சிங் வசம் வழக்கு மாற்றப்பட்டது.
Adani | Adani Enterprises Limited | AEL | Delhi Court | Digital Publishers | Notice | Meta | YouTube | Google |