வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்வு!

ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ. 80,000-க்கு விற்பனையாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

கிழக்கு நியூஸ்

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஏற்கெனவே ரூ. 60 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று வரலாறு காணாத வகையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அண்மையில் ஏறுமுகமாக உள்ளது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் இறக்கத்தைச் சந்தித்திருப்பதால் உலகச் சந்தையில் தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பது போன்றவை காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ. 960 ரூபாய் உயர்ந்து ரூ. 61,840 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ. 7,730 ஆக விற்பனையாகிறது. இந்த ஜனவரியில் தங்கத்தின் விலை சவரனுக்கு நாலாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அடுத்த இரு மாதங்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மேலும் ரூ. 3,000 வரை உயர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 10,000 ஆகவும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 80,000 ஆகவும் விற்பனையாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

2024 ஜனவரி தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,360 ரூபாயாக இருந்தது. பிறகு, செப்டம்பர் கடைசியில் ஒரு சவரன் விலை ரூ. 56,000 ஆக உயர்ந்தது. அடுத்த ஒரே மாதத்தில் அதாவது அக்டோபர் 31 அன்று ரூ. 59,640 ஆக ஒரு சவரன் தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த வருடம் ஜனவரி 1 அன்று ரூ. 57, 200 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் ஜனவரி இறுதியில் வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 61,840 ஆக உயர்ந்துள்ளது.