ANI
வணிகம்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து சீனிவாசன் ராஜினாமா!

அல்ட்ரா டெக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இனி இந்திய சிமெண்ட்ஸ் செயல்படும் என பங்குச்சந்தை அமைப்புகளுக்குக் கடந்த டிச.24-ல் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மேலாண் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து என். சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய சிமெண்ட் வர்த்தகத்தில் முதன்மை இடத்தில் உள்ளது ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களில் ஒன்றான அல்ட்ரா டெக் சிமெண்ட். உலகின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க  முடிவு செய்து, அதன் ஒரு பகுதியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்தது அல்ட்ரா டெக்.

முதற்கட்டமாக கடந்த ஜூனில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.8 சதவீத பங்குகளை ரூ. 1,900 கோடிக்குக் வாங்கியது அல்ட்ரா டெக். இதைத் தொடர்ந்து, 32.72 சதவீத பங்குகள் ரூ. 3,954 கோடிக்கு வாங்கப்பட்டது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகள் அல்ட்ரா டெக் வசமாகின.

இந்நிலையில், இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கைக்கு இந்திய போட்டி ஆணையம் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து அல்ட்ரா டெக் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இனி இந்திய சிமெண்ட்ஸ் செயல்படும் என கடந்த டிச.24-ல் இந்திய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கையகப்படுத்துதல் செயல்பாட்டின் இறுதி நடவடிக்கையாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார்.