வணிகம்

பிரிட்டனிலிருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும் ஆர்பிஐ

கிழக்கு நியூஸ்

பிரிட்டன் தங்கப் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 டன் தங்கத்தை இந்தியா எடுத்து வர ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முடிவு செய்துள்ளது.

இதுதொடர்புடைய செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. 1991-க்கு பிறகு இந்த அளவிலான தங்கத்தை ஆர்பிஐ இந்தியா எடுத்து வருவது இதுவே முதன்முறை.

காலம் காலமாகவே தங்கத்தை சேமித்து வைப்பதற்கான ஏதுவான இடமாக இங்கிலாந்து வங்கி இருந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் இங்கிலாந்து வங்கியையே தேர்வு செய்து வந்துள்ளன. தரவுகளின்படி ஆர்பிஐ வசம் 822.1 டன் தங்கம் உள்ளன. இதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நிதியாண்டில் 27.5 டன் தங்கத்தை ஆர்பிஐ வாங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள தங்கப் பெட்டகங்களில் சேமித்து வைப்பது ஒப்பீட்டளவில் எளிது என்றும், தங்கத்தை சேமித்து வைப்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் இல்லாமல் பரந்துப்பட்டு இருப்பது நல்லது என்ற கோணத்திலும் ஆர்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

100 டன் தங்கத்தை இந்தியா எடுத்து வருவது மூலம், வரும் மாதங்களில் மேலும் நிறைய தங்கம் இந்தியா எடுத்து வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து ஆர்பிஐ தங்கம் வாங்கத் தொடங்கியது. இதை எங்கு சேமித்து வைக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வந்தது. வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவு அதிகளவில் இருப்பதால், அவற்றில் சிலவற்றை இந்தியா எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார் அவர்.

மேலும், வெளிநாடுகளில் தங்கத்தை சேமித்து வைப்பதற்கென்று தனியாக தொகை செலுத்த வேண்டும். இந்தியாவில் சேமித்து வைப்பதன் மூலம் அதற்கான அவசியம் இல்லை என்பதும் சிறு காரணமாக உள்ளது.

ஆர்பிஐ, நிதியமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகள் உள்பட பல்வேறு அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் மட்டுமே இவை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வரப்பட்டு, இங்குள்ள தங்கப் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்படும். கடுமையான பாதுகாப்புடன் தங்கத்தை இந்தியா கொண்டு வர, சிறப்பு விமான சேவையின் அவசியமும் உள்ளது.

இந்தியாவில் மும்பை மற்றும் நாக்பூரிலுள்ள ஆர்பிஐயின் பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்கப் பெட்டகத்தில் தங்கம் சேமிக்கப்பட்டு வருகிறது.