வேலையின் அளவைக் காட்டிலும், வேலையின் தரம் தான் முக்கியம் என ஆனந்த் மஹிந்த்ரா மற்றும் அதார் பூனாவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
லார்சன் அண்ட் டர்போ (எல் அண்ட் டி) நிறுவனத்தின் தலைவர் எஸ்என் சுப்பிரமணியன், ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தது சர்ச்சையானது.
அண்மையில் வெளியான காணொளியில், "ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்க வைக்க முடிந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே. காரணம், நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்க்கிறேன்.
வீட்டிலிருந்து என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவியையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் தான் மனைவிகளால் கணவர்களை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகம் வந்து வேலை பாருங்கள்" என்று எஸ்என் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், மஹிந்த்ரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா வேலையின் தரம் முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் கூறியதாவது:
"நாராயண மூர்த்தி மற்றும் மற்றவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், இந்த விவாதம் தவறான திசை நோக்கி நகர்கிறது. வேலையின் அளவைக் காட்டிலும் வேலையின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அது 48 மணி நேரம் வேலை பார்க்கிறோமா, 40 மணி நேரம் வேலை பார்க்கிறோமா அல்லது 70 மணி நேரம் வேலை பார்க்கிறோமா, 90 மணி நேரம் வேலை பார்க்கிறோமா என்பதல்ல.
10 மணி நேரமாக இருந்தாலும், அதில் நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். 10 மணி நேரத்தில் உலகையே மாற்றிவிட முடியும்" என்றார்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது பற்றி கூறிய அவர், "நான் தனிமையில் இருக்கும் காரணத்தால் எக்ஸ் தளத்தில் இயங்கவில்லை. என் மனைவி அற்புதமானவள். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க எனக்குப் பிடிக்கும். நண்பர்களை அமைத்துக்கொள்வதற்காக நான் சமூக ஊடகத் தளத்தில் இல்லை. தொழில் செய்ய இதுவோர் அற்புதமான களம் என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதனால், நான் இதில் இயங்கி வருகிறேன்" என்றார் ஆனந்த் மஹிந்த்ரா.
சீரம் இன்ஸ்டிடியூட் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா எக்ஸ் தளத்தில் ஆனந்த் மஹிந்த்ராவைக் குறிப்பிட்டு பதிவிடுகையில், "ஆம் ஆனந்த் மஹிந்த்ரா, நான் அற்புதமானவன் என என் மனைவியும் நினைக்கிறாள். ஞாயிறுகளில் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்க அவளுக்கும் பிடிக்கும். எப்போதும் வேலையின் அளவைவிட, வேலையின் தரம்தான் முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.