வணிகம்

சொமாட்டோ என்பதில் மாற்றமில்லை: பெயர் மாற்ற சர்ச்சைக்கு நிர்வாகம் விளக்கம்

சமீபத்தில் பிளிங்கிட்டை கையகப்படுத்தியது சொமாட்டோ நிறுவனம்.

ராம் அப்பண்ணசாமி

சொமாட்டோ செயலியின் பெயர் மாற்றப்படவில்லை என்றும், தாய் நிறுவனத்தின் பெயரை மட்டுமே மாற்றுவதாகவும் பெயர் மாற்றம் தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளது சொமாட்டோ நிர்வாகம்.

இந்தியாவின் பிரபல உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான சொமாட்டோ, சமீபத்தில் பிளிங்கிட்டை கையகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து தாய் நிறுவனத்தின் பெயரை `சொமாட்டோ லிமிடெட்’ என்பதில் இருந்து `எடர்னல் லிமிடெட்’ என்று பெயர் மாற்றம் செய்வதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, உணவு விநியோகத்தை மேற்கொள்ளும் சொமாட்டோ, குயிக் காமர்ஸ் பணிகளை கவனிக்கும் பிளிங்கிட், நிகழ்வுகள் சார்ந்து இயங்கும் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் சமையலறைப் பொருட்கள் விநியோகிக்கும் ஹைப்பர்ப்யூர் ஆகிய 4 பிராண்டுகள், எடர்னல் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இது வெறும் பெயர் மாற்றம் என்கிற அளவில் இல்லாமல் குறிக்கோள் மாற்றமாக இருக்கும் என்றும், நிறுவனத்தின் ஸ்டாக் டிக்கரையும் சொமாட்டோவிலிருந்து, எடர்னல் என மாற்றப்போவதாகவும் அறிவித்தார் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல்.

இதனைத் தொடர்ந்து சொமாட்டோ செயலியின் பெயரை மாற்றப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டன. இது தொடர்பாக பலரும் கிண்டலாக பதிவிட்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, எடர்னல் என்ற பெயருக்குப் பதிலாக, சொமாட்டோவை டொமாட்டோ என மாற்றிருக்கலாம் என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோவின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (பிப்.7) வெளியிடப்பட்ட பதிவில், `மக்களே எடர்னர் என்பது தாய் நிறுவனத்தின் பெயர், செயலியின் பெயர் சொமாட்டோ என்றே தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.