வணிகம்

நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டு: சரிவைச் சந்தித்த ஜிடிபி!

முதல் காலாண்டைக் (6.7 சதவீதம்) காட்டிலும் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி குறைவு.

கிழக்கு நியூஸ்

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டான ஜூலை - செப்டம்பரில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக சரிந்துள்ளது.

கடைசி 7 காலாண்டுகளில் இது மிகக் குறைவு.

ஜூலை - செப்டம்பர் 2023-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.1 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டைக் (6.7 சதவீதம்) காட்டிலும் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி குறைவு.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. 2025 நிதியாண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என மத்திய வங்கி கணித்திருந்தது.

இந்தச் சூழலில்தான் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளது.

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், "பொருளாதார வளர்ச்சியின் சரிவு ஏமாற்றமளிக்கிறது. ஆனால், எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. உற்பத்தித் துறையில் பின்னடைவு ஏற்பட்டதால், பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்துள்ளது" என்றார்.

பொருளாதார ஆய்வறிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதியாண்டில் 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட சரிவால், பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ள 6.5 சதவீதத்தை அடைவதில் சிக்கல் உள்ளதா என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, "6.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைவது சவாலானது என்பதை தற்போதைய நிலையில் கூற முடியாது" என்றார் அனந்த நாகேஸ்வரன்.