வணிகம்

நாட்டின் பொருளாதாரம் 3-வது காலாண்டில் 8.4% வளர்ச்சி: மத்திய அரசு

இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் திறனைக் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

கிழக்கு நியூஸ்

நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதலிரு காலாண்டுகளில், அதாவது ஏப்ரல் - மே மற்றும் ஜூலை - செப்டம்பர் காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் முறையே 7.8 மற்றும் 7.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருந்ததாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக இருந்தது. 2023-24-ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த மதிப்பீடானது தற்போது 7.6 சதவிகிதமாகத் திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8.4 சதவிகிதமாக வளர்ச்சியடைந்திருப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் திறனைக் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்வதை உறுதி செய்வதற்கான எங்களுடைய நடவடிக்கைகள் தொடரும். 140 கோடி இந்தியர்கள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் இது உதவும்" என்றார்.