வணிகம்

நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்குக் கடந்த 2024-25 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சியில் சரிவு!

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ராம் அப்பண்ணசாமி

கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடைந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சியை எட்டியுள்ளது, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று (மே 30) வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை விடக் குறைவானதாகும். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கை தொய்வு நிலையை எட்டியுள்ளதை இது வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை ஒப்பிடும்போது, கோவிட் பெருந்தோற்றுக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது.

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, `2024-25 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 6.5% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 9.8% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

2024-25 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், அந்த நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கான தரவுகள் சிறப்பான வளர்ச்சியை காண்பித்துள்ளன. ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான (Q4) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4% ஆக இருந்தது. கடந்த நிதியாண்டின் நான்கு காலாண்டுகளிலும் இது மிக வேகமான வளர்ச்சியாகும்.

இந்த புள்ளிவிவரங்களின்படி, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பொருளாதார அளவில் ஜப்பானை முந்தி 4.18 டிரில்லியன் டாலர்களை இந்தியா எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.