ANI
வணிகம்

2023-ல் பங்குச் சந்தையில் அதிக ஆர்வம் செலுத்திய இந்தியர்கள்

ச.ந. கண்ணன்

2023-ல் பங்குச் சந்தையில் அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தியுள்ளது புள்ளிவிவரங்களின் வழியே தெரிய வந்துள்ளது.

சந்தை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருவதால் பலரும் இதில் முதலீடு செய்ய ஈடுபாடு காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியப் பங்குச் சந்தையில் ஈடுபடும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மொத்தமாக 8 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 22.4% அதிகரித்துள்ளது. இத்தகவலை தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) வெளியிட்டுள்ளது.

2022-ன் முடிவில் இந்தியப் பங்குச் சந்தையில் மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6.94 கோடியாக இருந்தது. டிசம்பர் 25, 2023 தேதியன்று இந்த எண்ணிக்கை 8.49 கோடியாக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2024 இறுதிக்குள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் மட்டும் 1.56 கோடி புதிய முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச் சந்தை ஈர்த்துள்ளது. 2023-ல் முதலீட்டாளர்களை ஈர்த்ததில் மஹராஷ்டிரத்தைப் பின்னுக்குத் தள்ளி, 23 லட்சம் முதலீட்டாளர்களுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது.

2023-ல் அதிக முதலீட்டாளர்களை ஈர்த்த மாநிலங்கள்

உத்தரப் பிரதேசம் - 23.1 லட்சம்

மஹாராஷ்டிரம் - 21.8 லட்சம்

குஜராத் - 11.3 லட்சம்

ராஜஸ்தான் - 9.9 லட்சம்

மேற்கு வங்கம் - 9.7 லட்சம்

மத்தியப் பிரதேசம் - 9 லட்சம்

பிகார் - 8.8 லட்சம்

தமிழ்நாடு - 8.2 லட்சம்

கர்நாடகம் - 7.4 லட்சம்

தில்லி - 6.2 லட்சம்

ஹரியாணா - 5.8 லட்சம்

ஆந்திரப் பிரதேசம் - 4.2 லட்சம்

மற்றவை - 27.2 லட்சம்

2023-ல் இறக்கத்தை எதிர்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக, இந்தியப் பங்குச் சந்தையில் அதிக முதலீட்டாளர்களை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரம் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் 1.48 கோடி பேர் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களாக உள்ளார்கள். 2வது இடத்தில் இருந்த குஜராத்தைத் தாண்டிச் சென்று 89.47 லட்சம் முதலீட்டாளர்களுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது உத்தரப் பிரதேசம். வளர்ச்சி விகிதம் 33.8%. குஜராத் 17.2% வளர்ச்சியோடு 76.68 லட்சம் முதலீட்டாளர்களுடன் 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

மேற்கு வங்கம், கர்நாடகம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகத் தலா 47 லட்சமாக உயர்ந்துள்ளது.

2023-ல் நிஃப்டி 50, 20 சதவீதமும் பிஎஸ்இ சென்செக்ஸ் 18 சதவீதமும் உயர்ந்துள்ளன. 61,000 புள்ளிகளுடன் 2023-ஐ தொடங்கிய சென்செக்ஸ், இந்த மாதம் 72,000 புள்ளிகளைத் தொட்டது. 18,000 புள்ளிகளுடன் வருடத்தைத் தொடங்கிய நிஃப்டி 50 தற்போது 21,700 வரை உயர்ந்துள்ளது.