அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து முதல் முறையாக ரூ. 85-ஐ தாண்டியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு சமீப காலமாக வேகமெடுத்துள்ளது. கடந்த டிச.18-ல் அன்றைய வணிக நேரத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 84.94 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று (டிச.19) இது மேலும் சரிந்து, வணிக நேரத்தின் முடிவில் ரூ. 85.08 ஆகக் குறைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 83-ல் இருந்து ரூ. 84ஆக சரிய ஏறத்தாழ 14 மாதங்கள் வரை ஆனது. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 84-ல் இருந்து ரூ.85 ஆக மூன்றே மாதங்களில் சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் சரிவுக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, மந்தமான பொருளாதார வளர்ச்சி, வரலாறு காணாத வர்த்தகப் பற்றாக்குறை, அண்ணிய செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையீடு, அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளது போன்றவை இந்திய ரூபாயின் சரிவுக்கான காரணிகளாக மேற்கோள்காட்டப்படுகின்றன.
குறிப்பாக கடந்த டிச.12-ல் மட்டும், சுமார் 532.2 மில்லியன் டாலர்களை இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதுவும் இந்திய ரூபாயின் சரிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு நிகராக ஆசியாவின் பிற வளரும் நாடுகளின் கரன்சிகளும் சரிவை சந்தித்துள்ளன.