தற்போது ரூ. 1 லட்சமாக உள்ள தானியங்கி முறையில் முன்கூட்டியே பணம் எடுப்பதற்கான வரம்பை ஐந்து மடங்கு உயர்த்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் குழுவின் 113-வது நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த வாரம் மார்ச் 23 அன்று ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் மத்திய வருங்கால வைப்பு ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.
தற்போது ரூ. 1 லட்சமாக உள்ள தானியங்கி முறையிலான முன்கூட்டியே பணம் எடுப்பதற்காக வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்துவதற்கான முன்மொழிவிற்கு, இந்த கூட்டத்தில் வைத்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலர் சுமிதா தாவ்ரா ஒப்புதல் அளித்ததாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்து தானியங்கி முறையில் முன்கூட்டியே பணம் எடுக்கும் நடைமுறை கடந்த ஏப்ரல் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்பித்த மூன்றே நாட்களில் கோரிக்கை செயல்படுத்தப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பணம் எடுப்பதற்காக இந்த நடைமுறையை முதல்முறையாக அமல்படுத்தியது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
இதைத் தொடர்ந்து கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றுக்காகவும் முன்கூட்டியே தானியங்கி முறையில் பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள ரூ. 1 லட்ச வரம்பு கடைசியாக மே 2024-ல் உயர்த்தப்பட்டது.