பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், தன் குழந்தைகளுக்கு சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வழங்கப்போவதாகப் பேசியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 11-வது இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின்படி, பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 162 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், ஃபோர்ப்ஸ் அறிக்கைகளின்படி, அவரது சொத்து மதிப்பு 107 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1994-ல் திருமணம் செய்துகொண்ட பில் கேட்ஸும், மெலின்டா கேட்ஸும், 2021-ல் விவாகரத்துப் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் ராஜ் ஷமானியுடனான பாட்காஸ்டில் பேசிய கேட்ஸ், தனது சொத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே தன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார். பணக்காரக் குடும்பங்களின் வாரிசுகளுக்கு சொத்தில் வழங்கப்படும் பங்கு குறித்து அவர் பேசியதாவது,
`அதைப் பற்றி முடிவுசெய்ய அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. என் விஷயத்தைப் பொறுத்தவரையில், எனது குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்கள், அவர்களுக்கு சிறந்த கல்வியும் கிடைத்தது. ஆனால் எனது சொத்தில் அவர்களுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைக்கும். ஏனென்றால், அது அவர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன்.
இது ஒன்றும் முடியாட்சி அல்ல, மைக்ரோசாஃப்டை ஏற்று நடத்துமாறு அவர்களிடம் நான் கூறுவது கிடையாது. சொந்தமாக வருவாய் ஈட்டி வெற்றி பெற அவர்களுக்கான ஒரு வாய்ப்பை கொடுக்க நான் விரும்புகிறேன்’ என்றார்.
பில் கேட்ஸ் மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் சார்ந்த செல்வாக்குமிக்க பணக்காரக் குடும்பங்களுக்கு இடையே இந்தப் போக்கு சகஜமாகிவருகிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோர் தங்களது சொத்துகளை வாரிசுகளுக்குக் கடத்துவதைவிட, சமூக சேவைப் பணிகளுக்குப் பயன்படுத்தவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.