ANI
வணிகம்

குகேஷுக்கு ரூ. 11 கோடி பரிசுத்தொகை: வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்திற்கும் மேல் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்திற்கு, 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்குக் கிடைக்கவுள்ள பரிசுத் தொகையை முன்வைத்து, அவர் செலுத்த வேண்டிய வருமான வரியை கணக்கிட்டுப் பதிவிட்டு வருகின்றனர் இணையவாசிகள்.

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷ், கடந்த டிச.12-ல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு இந்தியாவிலிருந்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்தார் குகேஷ்.

உலக செஸ் சாம்பியன் என்ற முறையில் குகேஷுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11.34 கோடி பரிசுத் தொகையாகக் கிடைக்கும். இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பு குகேஷின் சொத்து மதிப்பு ரூ. 8.26 கோடியாக இருந்தது. சாம்பியன்ஷிப் தொடரை வென்றதால், அவரது சொத்து மதிப்பு ரூ. 19.6 கோடியாக அதிகரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்திற்கும் மேல் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்திற்கு, 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் குகேஷின் ரூ. 11.34 கோடி (பரிசுத் தொகை) வருமானத்தில், சுமார் ரூ. 3.39 கோடி வருமான வரியாக பிடித்தம் செய்யப்படும் என தெரிகிறது.

ஒரு வேளை இந்த வருமானத்தின் மீது சர்ச்சார்ஜ் (surcharge) என்று அழைக்கப்படும் கூடுதல் வரி விதிக்கப்பட்டால், ரூ. 4.67 கோடி அளவுக்கு வரிப் பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வருமான வரித்துறைக்கு கோடிக்கணக்கில் வருமான கிடைக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் இணையவாசிகள் பலரும் விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.