யுபிஐ (UPI) மூலம் பெரு வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று பரப்பப்படும் ஊகத்திற்கு மத்தியில், யுபிஐ பணம் செலுத்தும் முறை நிலையானதாக இருக்கவேண்டும் என்றால் அதை இயக்குவதற்கான செலவை அரசாங்கம் அல்லது பயனர்கள் ஏற்கவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
மும்பையில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பி.எஃப்.எஸ்.ஐ. உச்சி மாநாட்டில் பேசிய மல்ஹோத்ரா, யுபிஐ இலவசமாக இருப்பது நல்ல பலன்களை கொடுத்துள்ளது என்றும் எண்ணிக்கை அடிப்படையில் பரிவர்த்தனைகள் விரைவாக உயர அது வழிவகுத்தது என்றும் கூறினார்.
மேலும், எந்தவொரு சேவையும் நிலையான வகையில் இருக்கவேண்டும் என்றால், அதற்கான செலவுகள் ஈடுசெய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் வெளியான ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் மட்டும் 18.4 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது ஆண்டுக்கு ஆண்டு 32% அதிகரித்துள்ளது.
உச்சி மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசியதாவது,
`இது (யுபிஐ) ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு. இது இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது, மேலும் அரசாங்கம் அதற்கான மானியத்தை வழங்குகிறது. இது நல்ல பலன்களைத் அளித்துள்ளது என்று நான் கூறுவேன்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், யுபிஐ அல்லது வேறு எந்த பணம் செலுத்தும் முறையும் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும்... மேலும் அதற்காக செலவுகளை யாராவது ஈடுகட்டினால் மட்டுமே அது நிலையானதாக இருக்கும்.
எனவே அது அரசாங்கமாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கும் வரை, ஆனால் அது அவ்வளவு முக்கியமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு சேவைக்கான செலவுகளும் கூட்டாகவோ அல்லது பயனரால் செலுத்தப்படவேண்டும்’ என்றார்.
இதனால் வருங்காலத்தில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது, பரிவர்த்தனை கட்டணம் (Merchant Dsicount Rate - MDR) வசூலிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.