ANI
வணிகம்

தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை!

சிறிய அளவிலான தங்கக் நகைக்கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

தங்க நகைக்கடன் குறித்து அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில், அது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தனிநபர்களுக்கு தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை கடந்த ஏப்ரல் 9-ல் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. இந்த வரைவு அறிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், வரைவு அறிக்கையால் சிறிய அளவிலான தங்க நகைக்கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பரிந்துரைகள் சிலவற்றை ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.

இதன்படி, இதுபோன்ற புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை அமல்படுத்த நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக தங்க நகைக்கடன் வாங்குபவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் விரைவாக கடன் வழங்குவதற்கு ஏதுவாக, புதிய விதிமுறைகளில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த வரைவு அறிக்கை குறித்து வரப்பெற்ற கருத்துகளை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருவதாகவும், வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்பு பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ரிசர்வ் வங்கி கருத்தில்கொள்ளும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.