உலகிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்கிற சாதனையை படைத்துள்ளார் எலான் மஸ்க்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உள் பங்கு வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்ததை அடுத்து, உலகிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 33,938 கோடி) சொத்து மதிப்பை எட்டிய நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். உள் பங்கு வர்த்தகத்தின் முடிவில், எலான் மஸ்கின் சொத்து 439.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த உள் பங்கு வர்த்தக நடவடிக்கை, சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயருவதற்குக் காரணமாக இருந்துள்ளது. மேலும் இந்த வர்த்தகத்தால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 350 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் 42 சதவீத பங்குகள் எலான் மஸ்க் வசம் உள்ளன.
மஸ்கின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயருவதற்கு அரசியல் காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார் எலான் மஸ்க். மேலும் அவரது பிரச்சாரத்திற்கும் குறிப்பிடத்தக்க வகையில் நிதியுதவி அளித்தார் மஸ்க்.
இதை தொடர்ந்து அமேரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதை அடுத்து, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு சுமார் 65 சதவீதம் வரை அதிகரித்தன. இதுவரை இல்லாத அளவுக்கு டெஸ்லா நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 415 டாலர்களாக உயர்ந்துள்ளது.