PRINT-99
வணிகம்

16-வது மத்திய நிதி ஆணைய குழுவினர் தமிழகம் வருகை: முதல்வர் ஸ்டாலின் விருந்து!

மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயை பகிர்ந்தளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் 5 வருடங்களுக்கு ஒருமுறை மத்திய நிதி ஆணையம் புதிதாக அமைக்கப்படும்.

ராம் அப்பண்ணசாமி

16-வது மத்திய நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் இன்று (நவ.17) தமிழகம் வருவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விருந்தளிக்கிறார்.

மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயை பகிர்ந்தளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 280-ன் கீழ் 5 வருடங்களுக்கு ஒருமுறை மத்திய நிதி ஆணையம் புதிதாக அமைக்கப்படும்.

இதன்படி அரவிந்த பனகாரியா தலைமையில் 16-வது மத்திய நிதி ஆணையத்தை கடந்தாண்டு டிசம்பர் 31 அன்று மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்தில் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சௌமியாகாந்தி கோஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2026 முதல் 2031 வரையிலான 5 வருடங்களுக்கான நிதிப் பகிர்வு குறித்த பரிந்துரைகளை 16-வது மத்திய நிதி ஆணையம் மத்திய அரசுக்கு வழங்கவுள்ளது. இதற்காக பல்வேறு தரவுகள் மற்றும் மாநில அரசுகளின் கோரிக்கைகளைப் பெற ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய நிதி ஆணையக் குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதன் அடிப்படையில் 4 நாள் பயணமாக சிறப்பு விமானம் மூலம் மத்திய நிதி ஆணைய குழுவினர் இன்று (நவ.17) தமிழகம் வருகின்றனர். இரவு 7.30 மணிக்கு கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விருந்தளிக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை முதல்வர் உள்ளிட்ட தமிழக அரசுப் பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்துறையினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மத்திய நிதி ஆணைய குழுவினர் மாலை செய்தியாளர்களை சந்திக்கின்றனர் . இதனை அடுத்து வரும் 19-ல் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை ஆய்வு செய்துவிட்டு பிறகு, வரும் 20-ல் ராமேஸ்வரம் சென்று ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.