ANI
வணிகம்

பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பு: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் என்னென்ன? | GST | Tax Slabs

தற்போது அமலில் இருக்கும் நடைமுறையைப் பின்பற்றி பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் வழக்கம்போல ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு வெளியே இருக்கும்.

ராம் அப்பண்ணசாமி

வரும் தீபாவளி இரட்டை தீபாவளியாக மாறும், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் என்று நேற்றைய (ஆக. 15) சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில், 5% மற்றும் 18% என ஜிஎஸ்டி வரியில் இரண்டு வரி விகிதங்களை மட்டுமே தக்கவைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாகவும், நடப்பாண்டு தீபாவளிக்குள் இந்த மாற்றத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி வரி கட்டமைப்பின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு 0% வரியும், தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% வரியும், நிலையான பொருட்களுக்கு 12% வரியும், மின்னணு பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரியும், ஆடம்பர மற்றும் தீங்கிழைக்கும் பொருள்களுக்கு 28% வரியும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் தீபாவளிக்குள் மறு சீரமைக்கப்படும் ஜிஎஸ்டி வரியில் 5% மற்றும் 18% ஆகிய இரு வரி வகிதங்களுடன், ஆடம்பர மற்றும் புகையிலை, சிகரெட் போன்ற தீங்கிழைக்கும் பொருள்களுக்கு 40% சிறப்பு வரி மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன்படி தற்போது 28% வரி விகித அடுக்கில் இடம்பெற்றுள்ள 99 சதவீத பொருள்கள் 18% வரி விகித அடுக்கிற்கு மாற்றப்படும் என்றும், தற்போது 12% வரி விகித அடுக்கில் இடம்பெற்றுள்ள 99 சதவீத பொருள்கள் 5% வரி விகித அடுக்கிற்கு மாற்றப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது அமலில் இருக்கும் நடைமுறையைப் பின்பற்றி பெட்ரோல், டீசல் போன்ற பொருள்கள் வழக்கம்போல ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு வெளியே இருக்கும். அத்துடன் வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்ற அதிக உழைப்பு மிகுந்த மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு தற்போதுள்ள விகிதங்களின்படி வரி விதிக்கப்படும்.