வணிகம்

ரூ. 2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகுமா?: ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்!

ரூ. 6,181 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

ராம் அப்பண்ணசாமி

தற்போது ரூ. 6,181 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும், ரூ. 2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு (செல்லாது) செய்யப்படுவதாக கடந்த 8 நவம்பர் 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அதன்பிறகு, கடந்த மே 19, 2023 அன்று, ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், அக்டோபர் 07, 2023 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ. 2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ளும் வசதி நடைமுறையில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதன் நிலை குறித்து அவ்வப்போது ரிசர்வ் வங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டு வந்தது. இந்நிலையில், அது தொடர்பான புதிய செய்திக்குறிப்பு இன்று (ஜூன் 2) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி கூறியதாவது,

`ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான வசதி அமலில் உள்ளது. வங்கி கணக்குகளில் செலுத்த ரூ. 2,000 நோட்டுகளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் பெற்று வருகின்றன.

மே 19, 2023-ல் திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போதைய (31 மே 2025) நிலவரப்படி ரூ. 6,181 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதனால் 98.26% ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

ரூ. 2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.