ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதற்காக பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனில் அம்பானிக்குத் தடைவிதித்துள்ளது செபி.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பதவியில் இருக்கும் அனில் அம்பானி உட்பட சில நிர்வாகிகள், அந்நிறுவனத்தின் நிதியை சட்டவிரோதமான முறையில் திசை திருப்பியுள்ளனர் என்று இது தொடர்பான 222 பக்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளது இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் செபி.
இதை அடுத்து அனில் அம்பானி உட்பட ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சில முக்கிய நிர்வாகிகளுக்கு இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 வருடங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது செபி. மேலும் செபியால் அனில் அம்பானிக்கு ரூ. 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 6 மாதங்கள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மீது ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. செபியின் உத்தரவைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் பங்குகள் 14 சதவீதம் வரை சரிந்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல்ஸ், ரிலையன்ஸ் நேவல் ஆகிய நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தற்காலிக தடை அமலில் உள்ளது. கடந்த பிப்ரவரி 2020-ல் அனில் அம்பானி திவாலானதாக இங்கிலாந்து நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.