வணிகம்

இந்தியா சிமெண்ட்ஸை வாங்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக்

ராம் அப்பண்ணசாமி

ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய நிறுவனமான அல்ட்ரா டெக், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை அதன் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 3,954 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஜூனில், ரூ. 1,900 கோடிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 23 % பங்குகளை ஏற்கனவே வாங்கியது அல்ட்ரா டெக். இதனால் தென் இந்தியாவின் முக்கியமான சிமெண்ட் வர்த்தகத்தில் ஆழமாகத் தடம் பதிக்கிறது அல்ட்ரா டெக்.

ஆண்டுக்கு 154.86 மில்லியன் டன் உற்பத்தித் திறனுடன் இந்தியாவின் சிமெண்ட் வர்த்தகத்தில் முதன்மையான இடத்தில் உள்ளது அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம். வரும் வருடங்களில் உலகின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க முடிவு செய்து அதற்கான இலக்கை முன்வைத்து நகர்ந்து வருகிறது அல்ட்ரா டெக். இந்த இலக்கின் ஒரு பகுதியாகவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது அல்ட்ரா டெக்.

இது தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களான சீனிவாசன், சித்ரா சீனிவாசன், ரூபா குருநாத், அசோக் பாலாஜி ஆகியோருடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது அல்ட்ரா டெக் நிறுவனம். பங்குகள் பரிமாற்றம் முடிவுக்கு வந்ததும், இந்தியா சிமெண்ட்ஸில் அல்ட்ரா டெக் நிறுவனத்தின் பங்குகள் 55 % ஆக உயரும்.

இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ. 390 வீதம் வாங்க அல்ட்ரா டெக் முடிவு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் முடிவுக்கு வந்தபோது இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு ஒன்றின் விலை ரூ. 374.60 ஆக இருந்தது.

ஒப்பந்தத்தின் வழியாக முதலீட்டாளர்களிடம் வாங்கியது போக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பிற 26 சதவீத பங்குகளை ரூ. 3142.35 கோடிக்கு வாங்க அதன் பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அல்ட்ரா டெக்.