படம்: பேஸ்புக் | சந்துரு செல்வம்
புத்தகம்

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சுவாமிநாதன்

2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியப் படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் 21 மொழிகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் 2023-ல் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகுடி மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதும், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் தேவி பாரதிக்கு வழங்கப்படவுள்ளன.

தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இலக்கிய உலகில் பயணித்து வருகிறார். பள்ளி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய தேவி பாரதி, எளிய மக்களின் வாழ்வியலைத் தனது எழுத்துகள் மூலம் தொடர்ந்து வெளிக்கொண்டு வருபவர். 'நீர்வழிப் படூஉம்' தேவி பாரதியின் மூன்றாவது நாவல்.

தேவி பாரதிக்குப் பிரபலங்களும் வாசகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.