புத்தகம்

திவ்யப் பிரபந்தத்தையும் ஒலிப்பதிவு செய்துள்ளேன்: இளையராஜா

கிழக்கு நியூஸ்

திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல திவ்யப் பிரபந்தத்தையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஆண்டாளின் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்று நூலை வெளியிட்டார்கள்.

இந்த விழாவில் இளையராஜா பேசியதாவது:

"நான் முதன்முதலாக ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன். முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைக்கிறேன். பின்னணி இசைக்காக வந்த அந்தப் படத்தின் முதல் காட்சியில் கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்தக் காட்சியில் அவர் டூரின் டாக்கிஸில் ஒரு படத்தைப் பார்க்கிறார். அந்தப் படத்தில் ஆண்டாளின் நடனம் சென்றுகொண்டிருக்கிறது. அது வேறொரு படத்தில் எடுக்கப்பட்ட காட்சி. ஆண்டாளைப் பார்த்து மெய்மறந்து அவளுடன் கலப்பதைப்போல ஓர் உணர்வைத் தூண்டுகிறது.

ஆண்டாள் பாடல் ஏற்கெனவே படத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், ஒரு பகுதியில் இசை இல்லாமல் இருந்தது. அந்த இடத்தில் நான் இசையமைக்க வேண்டும். ஆக, முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள். திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல திவ்யப் பிரபந்தத்தையும் நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் அதை வெளியிடக் காத்திருக்கிறேன்.

மக்கள் இசைஞானி என்று அழைப்பதில் எனக்கு எந்தக் கர்வமும் கிடையாது. நான் விழாக்களில், கூட்டங்களில் ஹாார்மோனியம் இசைத்தபோது மக்கள் நிறைய ஊக்கம் தருவார்கள். மக்களின் கைத்தட்டல்கள் அதிகரிக்க, எனது கர்வமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் இந்தக் கைத்தட்டல்கள் யாருக்கு என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மக்களின் இந்தக் கைத்தட்டல் இசையமைத்தவருக்கானது என்கிற புரிதல் எனக்கு வந்தது. அப்போதே இந்தக் கர்வத்திலிருந்து நான் விடுபட்டுவிட்டேன்.

இந்த விழாவில் வந்து அமர்வதற்குத் துளியும் சம்பந்தமில்லாமல் நான் இருக்கிறேன். ஆண்டாளைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நாம் அமர்ந்திருக்கிறோமே என்கிற எண்ணம் இருந்தது. இந்த விழாவில் சம்பந்தம் இல்லாதவன் என்று நான் என்னை நினைத்துக்கொண்டாலும், என்னை சம்பந்தப்படுத்தி இந்த இடத்தில் அமரவைத்தவனுக்கு (இறைவனுக்கு) நன்றி.

இன்றைய தலைமுறைக்கு இது சென்றடைய வேண்டும் என்கிற முறையில் ஜெயசுந்தரின் எழுத்து இந்தப் புத்தகத்தில் அமைந்திருப்பது மிகவும் உத்தமமானது" என்றார் இளையராஜா.